புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.
தடுக்க முயன்ற 3 காவலர்களும் தாக்கப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது. காரைக்கால் மாவட்டம் நிரவி கன்னியம்மன் கோவில் தெரு அருகே ஆற்றுப்படுகையில் உள்ள விளை நிலத்தில் ஒரு தரப்பினர் விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த நிலத்தை மற்றொரு தரப்பினர் கைப்பற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை ஒரு தரப்பினர் உருட்டுக்கட்டையால் அடித்து தாக்குதலில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்வு இடத்திற்கு சென்ற நிரவி காவல்துறையினர் அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர். அவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்த தாக்குதலின் போது ஒரு பெண் காவலர் உட்பட 3 போலீசார் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக 20 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.