தகராறில் உருட்டுக் கட்டைகளுடன் மோதிக்கொண்ட இரு தரப்பினரில் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் 26 வயதுடைய நர்ஸ் ஒருவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த நர்ஸ் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நர்ஸ் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை அவரது தந்தை அரவிந்திடம் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது அரவிந்த் சபாபதி, சதீஷ் ஆகியோர் கூறியதனால் தான் நான் வீடியோ எடுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து நர்சின் தந்தை அவர்களிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருதரப்பினரும் ஆத்திரமடைந்து ஆபாசமாக ஒருவரை ஒருவர் திட்டி உருட்டு கட்டைகளால் மோதிக்கொண்டனர். இதில் நர்சின் தந்தை அவரது ஆதரவாளர்களான சாத்தங்குப்பம் பகுதியில் வசிக்கும் ராமமூர்த்தி, பழனிவேல், ஜெயசங்கர், இந்திராணி, ராஜேஷ், ஆறுமுகம், நாராயணன், தனபால், தணிகாசலம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருதரப்பினரையும் சேர்ந்த நாராயணன், தனபால், ஆறுமுகம், முத்து, ராகுல், கோகுல் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.