தாயுடன் தூக்கில் தொங்கிய மகனும் மகளும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர் சம்சுதீன் நிஷா. இவர் சென்னையை சேர்ந்த காஜா முகைதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷப்ரின்,சபீர் என்ற 2 பிள்ளைகள் இருந்தனர். அதன்பின் உடல்நலக்குறைவால் காஜா முகைதீன் இறந்துவிடவே சம்சுதீன் நிஷா இரண்டாவதாக கள்ளகுறிச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருக்கும் சம்சுதீன் நிஷா நேற்று மதியம் தனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிள்ளைகளுடன் தானும் தூக்கில் தொங்க போவதாகவும் ஐந்து நிமிடத்தில் உயிர் பிரிந்து விடும் எனவும் கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷெரீப் தனது தாய் தந்தைக்கு தொலைபேசியில் தகவலை தெரிவித்துள்ளார். இருவரும் பள்ளிவாசளில் இருந்து வீட்டுக்கு ஓடி வந்து பார்த்த போது கதவு உள் பக்கமாக தலித்து இருந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உடைய உதவியால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சம்சுதீன் நிஷா தனது இரண்டு பிள்ளைகளுடன் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஷப்ரின், சபீர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்சுதீன் நிஷாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சம்சுதீன் நிஷாவின் அண்ணனான அப்சர்அலி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்சுதீன் நிஷா எதற்காக தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.