திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மண்டல வாடி கிராமத்தில் சிவகாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முரளி (27) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். இதில் முரளிக்கு திருமணம் ஆகி இந்துஜா என்ற மனைவி இருக்கிறார். இவர் பிரசவத்திற்காக தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்துஜாவுக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் முரளி மற்றும் சிவகாமி இருவரும் ஒரு விவசாய நிலத்தில் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது முதல் கட்ட விசாரணையில் முரளி தன்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக ஆசையாக சென்றுள்ளார்.
ஆனால் பெண் குழந்தை பிறந்ததை முரளியால் ஏற்றுக்கொள்ள முடியாததால் மிகவும் விரக்தி அடைந்துள்ளார். அதாவது முரளி தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்துள்ளார். ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் அதை வளர்ப்பதற்கு நிறைய செலவாகும் என்று அச்சப்பட்ட முரளி தன்னுடைய தாய் சிவகாமியுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.