பெற்ற தாயை குடிபோதையில் இரண்டு மகன்கள் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியில் வசித்து வருபவர்கள் கணேசன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா(48). இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் (27) மற்றும் அருண்குமார் (23) என்ற இரு மகன்கள் உள்ளனர். சரோஜா கூலித் தொழில் செய்து வருகிறார். மேலும் இவருடைய மகன் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். கணேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் சரோஜாவும், அவரது 2 மகன்களும் வசித்து வந்தனர்.நேற்று முன்தினம் நடுராத்திரியில் விக்னேஷ், அருண்குமார் இருவரும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் வைத்திருந்த ரூ.2,000 பணத்தை அவர்கள் வீடு முழுவதும் தேடி பார்த்து உள்ளனர். அப்போது பணம் வீட்டில் இல்லாததால், அவர்களுடைய தாய் சரோஜாவிடம் இதுபற்றி இருவரும் கேட்டுள்ளனர்.
அதற்கு சரோஜா அந்த பணத்தை எடுத்து செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் தாய்-மகன்கள் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் கொண்ட விக்னேஷ், அருண்குமார் இருவரும் மின்விசிறி பொருத்தப்படும் இரும்பு கம்பியை கொண்டு சரோஜாவை தாக்கியதில், வலி தாங்க முடியாமல், அவர் அலறி உள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்துள்ளனர். உடனே விக்னேஷ், அருண்குமார் இருவரும் சரோஜாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்வதாக கூறி ஒரு தனியார் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார்கள். அவர்கள் அவ்வாறு கூறியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனிடையே சூரம்பட்டிவலசு சுடுகாடு பகுதியில் இரண்டு பேர் சந்தேகப்படும்் வகையில் நின்றுகொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அங்கு நின்ற இரண்டு பேரும் விக்னேஷ், அருண்குமார் என்பதும், 2 பேரும் சேர்ந்து தாக்கியதில் சரோஜா உயிர்் இழந்து விட்டதால், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று புதைத்து விட்டதும் தெரியவந்தது.
கிடைத்த தகவலைை அடுத்து புதைத்த சரோஜாவின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்பின் ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி முன்னிலையில் நேற்று மாலை உடலை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது. உடலை வெளியே எடுத்த பிறகு, அதை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான விக்னேஷ், அருண்குமார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-” சரோஜா இறந்த சம்பவத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல், அவரது மகன்கள் தாயின் உடலை மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்துவிட்டனர். வருவாய்த்துறையினரின் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு வெளிவரும். அதில் சரோஜா கொலை செய்யப்பட்டது உறுதியானால், கொலை வழக்காக மாற்றப்படும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.