சென்னை அருகே தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் கீழ்கட்டளை துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது கணவர் கணேசன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இருவரையும் பிரபாவதி தந்தையான செல்வராஜ் என்பவர் பராமரித்து வர, பேத்தி சோபனா அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக பிரபாவதி எதையோ இழந்தது போல் காட்சியளிக்க அவரது தந்தை ஆறுதல் கூறியுள்ளார்.
இதையடுத்து வெளியே சென்று பேத்திக்கு தின்பண்டம் வாங்கி சென்ற செல்வராஜ் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில், வீடு உள்புறமாக தாழிட்டு இருந்தது. இதையடுத்து கதவை தட்ட கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கையில், தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து காவல் நிலைத்தில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் இறந்து 5 ஆண்டுக்கு பின்னும் நீடித்த விரக்தியில் தாய் மகளுடன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.