Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” மாநகர பேருந்து டயரில் சிக்கி தாய்-மகள் மரணம்…… சென்னையில் சோகம்….!!

சென்னை கீழ்கட்டளை அருகே மாநகரப் பேருந்து சக்கரத்தில் சிக்கி தாயும் 5 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆலந்தூர் பகுதியை அடுத்த திரிசூலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சுதா. இவர்கள் இருவருக்கும் ஷிவானி தீபக் ஆகிய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுதா தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு  கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு பின் மீண்டும் மாலை நேரத்தில் தனது வீட்டிற்கு ஸ்கூட்டியில் குழந்தைகளோடு வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது ஈச்சங்காடு மெயின் ரோடு அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று சுதா ஸ்கூட்டி மீது உரசியது. இதில் நிலைதடுமாறிய சுதா கீழே விழுந்தார். அப்பொழுது தாம்பரத்திலிருந்து தியாகராயநகர் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து ஒன்று கீழே விழுந்த சுதா மற்றும் 5 வயது சிவாணி என்ற குழந்தையின் மீது ஏறியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிறுவன் தீபக் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினார். இதையடுத்து பரங்கிமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த அதிகாரிகள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சில பொதுமக்கள் ஆத்திரமடைந்து பஸ் கண்டக்டர் பழனி என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின் காவல் துறை அதிகாரிகள் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் முறையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |