எல்லோருக்கும் கடவுள் கொடுத்த பரிசுதான் அம்மா. அம்மா என்று அழைக்காத உயிர் உலகில் இல்லை. தாய் அன்புக்கு நிகர் எதுவுமில்லை. தாய்மை உயிரினத்தின் வரம். தாலாட்டி பாலுட்டி பேணும் தாய்மையின் பெருமையை நினைவு கூறும் நாள் தான் இந்த அன்னையர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு அதற்கான சான்றுகள் பல உள்ளன.
இருப்பினும் அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் அண்ணா மரியா ஜார்விஸ். இவரது அம்மா அமெரிக்காவில் நடந்த யுத்தம் ஒன்றில் பலியான காயமடைந்த வீரர்களை தாய் அன்போடு நேசித்து பணிவிடை செய்த அவர்கள் குடும்பங்களுக்கு நல்வாழ்விற்காக தன்னை அர்ப்பணித்து அதற்காகவே பாடுபட்டு 1905 ஆம் ஆண்டில் உயிர்நீத்தார். இவர் நடத்தி வந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில், “அன்னையை போற்றுவதற்கு ஒருநாள் அன்னையர் தினம் வரும்” என்று பாடியிருந்தார்.
தனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக 1908 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து கௌரவித்தார். இதன் தொடக்கமாகவே ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினத்தைக் கொண்டாடினர். அன்னையர்களை கௌரவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்த இவரின் கோரிக்கையை ஏற்று அதிபர் வுட்ரோ வில்சன் 1914 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அன்னையர் தினம் விடுமுறையாக அறிவித்தார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுயநலமில்லாத கலப்படமில்லா ஓர் அன்பு என்றால் அது தாயிடம் கிடைக்கும் அன்புதான். இளமை நம்மை விட்டுப் போகும், வளமை நம்மை விட்டுப் போகும். ஆனால் உங்களுக்கு எவ்வளவு வயதானாலும் தாய் உயிரோடு இருந்தால் அந்த தாயின் அன்பு மட்டும் நீங்கள் பிறந்த அன்று தொட்டு இருந்தது போலவே இறுதிவரை இளமையாகவும் வளமையாகவும் இருக்கும். குற்றங்களை மன்னிக்கும் ஒரே நீதிமன்றம் அன்னை. அன்னையே அன்பின் எல்லை. அன்னையே தாய்மையின் தகைமை. அன்னையே அன்பாலயம். அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் அனைவருக்கும் பெருமை.