மொபட் மீது கார் மோதிய விபத்தில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்து விவசாயி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது பேர குழந்தைகளான அஜய் மற்றும் பரணி அவருடன் மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வசிக்கும் புனிதன்-லீலா தம்பதியினர் காரில் திருச்சி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பெரியசாமியின் மொபட் மீது புனிதனின் கார் பலமாக மோதி விட்டது.
இதனால் காருக்கு அடியில் சிக்கிய மொபட் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உராய்வின் காரணமாக இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் புனிதன்-லீலா தம்பதியினர் உடனடியாக காரை விட்டு இறங்கி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய், தங்க கொலுசு, செல்போன்கள் மற்றும் நில ஆவணம் போன்றவை எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.