இருசக்கர வாகனத்தில் வேன் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி, தங்கம் தம்பதியினர் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காவாங்கரை மீன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் கருப்பசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ரத்த காயத்துடன் இருந்த தங்கத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.