வேலூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல் கொத்தக்குப்பம் கிராமத்தில் பிச்சாண்டி மகன் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை செய்யும் தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சங்கராபுரத்தில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது மேல்பட்டி- கடாம்பூர் சாலையில் சக்திவேல் சென்று கொண்டிருக்கும் போது கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் அவரது மோட்டார் சைக்கிளும் எதிரெதிரே மோதிக்கொண்டது.
இதனால் சக்திவேல் தூக்கி எறியப்பட்டு தரையில் விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் சக்திவேலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் சக்திவேல் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மேல்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.