மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி பீச் ரோட்டில் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று, சாகசங்கள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி தூத்துக்குடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தவர்கள் பாத்திமா நகர் பகுதியில் வசிக்கும் மார்ஷல் மோசா, ஸ்நோவின், பிரவீன் பழனி மற்றும் கனகவேல் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் காவல்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வது, பைக்ரேஸ், வீலிங் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.