மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குன்னம் பகுதியில் சேட்டு முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நெல் அறுவடை இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்து விட்டு பெரம்பலூரில் இருந்து வேப்பூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் கனமழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில் வைத்தியநாதபுரம் சாலையில் துணை மின் நிலையம் அருகில் சேட்டு முகமது வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் சேட்டு முகமதுவின் தலையில் பலத்த அடிபட்டது. இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் சேட்டு முகமதுவை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சேட்டு முகமதுவை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேட்டு முகமது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து சேட்டு முகமதுவின் மனைவியான ரகமானி குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.