மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெத்தரங்கன்விளை பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரிகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தனசேகர் என்பவரின் மகனான முத்துகிருஷ்ணன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் திருவனந்தபுரத்திற்கு வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டனர். இந்நிலையில் கோட்டை கருங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் நின்ற மின் கம்பம் மீது மோதியது.
இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் அரிகரன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அரிகரன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.