மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதூர் பாண்டியாபுரம் அருகில் வந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கணேசன் வந்த மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்த மாடு மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்து அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து புதியம்புத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கணேசனின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.