சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் நவீன், அபிஷேக் என்ற இரு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உலக்குடியில் வசிக்கும் அவர்களது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனையடுத்து விழா முடிந்த பிறகு இருவரும் மீண்டும் உசிலம்பட்டிக்கு திரும்பியுள்ளனர். மேலும் பனைக்குடி கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் நரிகுடியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அதே சமயத்தில் அபிஷேக், நவீன் ஆகிய இருவரும் வந்த மோட்டார் சைக்கிள் சாலையை கடக்க முயன்ற கருப்பசாமி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நவீன், கருப்பசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் பலத்த காயமடைந்த அபிஷேக்கைமீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நவீன், கருப்பசாமி ஆகிய இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.