மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரசோழபுரம் கிராமத்தில் மலையபெருமாள் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதியாணி பகுதியில் வசிக்கும் டிரைவரான பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி மோட்டார் சைக்கிளில் சுந்தரசோழ புரத்தில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து பழனிசாமி நிகழ்ச்சி முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பழனிசாமி பொன்னமராவதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் சுந்தரசோழபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் ஒரு மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்தவழியாக சென்றவர்கள் இதுகுறித்து பழனிசாமிக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிசாமி பார்த்த போது எரிந்து கிடந்த மோட்டார் சைக்கிள் அவருடையது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று தீ வைத்து எரித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.