மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கட்டிட தொழிலாளியான மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் களக்காடு-நாங்குநேரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மைக்கேல்ராஜ் பாட்டைபிள்ளை மதகு அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது களக்காடு கோவில்பத்து பகுதியில் வசிக்கும் பிலிப் என்பவர் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக மைக்கேல்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பிலிப் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் மைக்கேல்ராஜ் சரிந்து சாலையில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் பின்னால் வந்த லாரி மைக்கேல்ராஜ் மீது ஏறியதில் உடல் நசுங்கி பலத்த காயமடைந்தார். இதேப்போல் பிலிப் மற்றும் அவரது மகன் பில்தாஸ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து களக்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 3 பேரையும் உடனடியாக மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் பிலிப் மற்றும் அவரது மகன் பில்டர்ஸ் ஆகிய இருவரையும் களக்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மைக்கேல்ராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த பகுதியில் குறுகிய வளைவாக இருப்பதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.