மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேட்டுக் குப்பை குறிச்சி பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து ஆலடிப்பட்டி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக ஆழ்வார்குறிச்சி பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ் என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் தள்ளிக்கொண்டே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் முத்து ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சங்கர் கணேஷின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முத்து மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். மேலும் சங்கர்கணேஷ் லேசான காயம் அடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சங்கர் கணேஷுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கங்கைகொண்டான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.