பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் இறைச்சி வியாபாரியான அமீன்பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அமீன்பாஷா ஆம்பூரில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் குடியாத்தம் பகுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து அமீன்பாஷா மோட்டார் சைக்கிளில் அகரம்சேரி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அமீன்பாஷாவின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பாலத்தில் மோதிய விபத்தில் அவர் இரும்பு தடுப்புகள் மீது விழுந்தார். இதனால் கழுத்து பகுதியில் இரும்பு கம்பிகள் குத்தி, முகம் சிதைந்ததால் அமீன்பாஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அருகிலுள்ளவர்கள் பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அமீன்பாஷாவின் சடலத்தை உடனடியாக மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.