மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாராசூர் கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் அவரது நண்பரான அபிஷேக் ஆகிய இருவரும் கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதேபோன்று அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவரின் மகனான விஜய் என்பவரும் பாராசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இதனால் சதீஷ் அவருடைய நண்பர்களான அபிஷேக், விஜய் ஆகியோருடன் தேர்வு எழுதுவதற்காக கொருக்கை அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தாண்டுகுளம் கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது மாணவர்கள் மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த அதே பகுதியில் வசிக்கும் எழில்குமார் என்பவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உள்பட 4 பேரும் காயமடைந்தனர். இதனையடுத்து லேசான காயமடைந்த அபிஷேக் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தேர்வு எழுத சென்றான். இதனையடுத்து பலத்த காயமடைந்த சதீஷ், விஜய், எழில்குமார் ஆகிய 3 பேரையும் உடனடியாக மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செய்யாறு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.