மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக உள்ளார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உதய ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் உதய ஷாலினி 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தியும், உதயஷாலினியும் பழைய காயலில் உள்ள மாவு மில் அருகில் மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் சாலையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக உதயஷாலினி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த உதயஷாலினியை அருகிலிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு உதயஷாலினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆத்தூர் காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆவுடையார்புரம் பகுதியில் வசிக்கும் பாலசூரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.