தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், உள்ளாட்சி தேர்தலிலும் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு வருகிற 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை தற்போதிருந்தே பல்வேறு கட்சிகளும் வகுக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் 2024-ம் ஆண்டு நடைபெறும் எம்பி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து அடுத்த 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் முடிக்க வேண்டும் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சியின் வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் 234 தொகுதிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தின் போது எம்பி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அறிவுறைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படுகிறது.