நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன் என்று எம்பி கனிமொழி கிண்டலாக ட்விட் செய்துள்ளார்.
குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, NO TO CAA என்று எழுதியிருந்தனர். அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகர் காவல் துறையினர் கோலம் போட்டுக் கொண்டிருந்த நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேரை குண்டுக்கட்டாக தூக்கிக் கைது செய்தனர்.
அவர்களை அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்கவைத்த காவல் துறையினர், சாலையில் அனுமதி இல்லாமல் கோலங்கள் போடக்கூடாது போராட்டங்கள் நடத்தக் கூடாது என எச்சரித்த காவல் துறையினர் விடுவித்தனர். கோலம் போட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளும் அரசை விமர்சித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்.#Rangoli #கோலம் pic.twitter.com/gtUJfT9OUR
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 29, 2019