முதியவர் கொலை வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடையடியூர் பகுதியில் நாகபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மாடுகளை காணவில்லை. இதனை தேடிய போது நாகபத்திரனுக்கு சாயர்புரம் அருகிலுள்ள நட்டாத்தி-மீனாட்சிபட்டி சாலையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நாகபத்திரன் மாடுகளை அழைத்து வருவதற்காக சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் மீனாட்சிபட்டி சாலையோரத்தில் நாகபத்திரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் நட்டாத்தி காட்டு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஓடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பொட்டலூர் பகுதியில் வசிக்கும் தங்கராஜ் என்பதும் இவர் நாகபத்திரனை வெட்டி கொலை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தங்கராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் காட்டுப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நாகபத்திரனிடம் தங்கராஜ் அருகில் சென்று போன் செய்ய செல்போன் கேட்டுள்ளார். அதற்கு நாகபத்திரன் செல்போன் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாகபத்திரனை வெட்டி கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து செல்போனையும் பறித்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தங்கராஜிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.