மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கஞ்சம்பாளையம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியில் செல்பவர்கள் இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாக்கடை கால்வாயில் இருந்து முதியவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் குருவாயூரப்பன் நகர் பகுதியில் வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.