மிரட்டலுக்கு பயந்து முதியவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(69). இவர் அதே பகுதியில் 10 ஆண்டுகளாக மிதிவண்டி பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். செல்வராஜ் தனது நண்பர் முருகன் என்பவருக்கு இடைத் தரகராக செயல்பட்டு தினேஷ் என்பவருக்கு சொந்தமான 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த நிலம் ஏற்கனவே நான்கு நபர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முருகனுக்கு தெரியவந்துள்ளது .இதுகுறித்து முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக இடைத்தரகராக செயல்பட்ட செல்வராஜை சிலர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் செல்வராஜ் மனவேதனையில் இருந்த நிலையில் அவரை மிரட்டிய நபர்களை பற்றி நான்கு பக்கங்களில் எழுதி வைத்துவிட்டு அவரது கடையில் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வராஜ் எழுதிய கடிதத்தை கைப்பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தானம், குமார்,ஜோசப், தினேஷ் ,ஜெயகாந்தன், பிரபு ஆகிய ஆறு நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த 6 பேர் மீது ஏற்கனவே நில மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.