Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… காற்றாலை உச்சிக்கு சென்ற முதியவர்… 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் மீட்பு…!!

80 வயது முதியவர் கொட்டும் மழையில் காற்றாலை மீது ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம்(80). விவசாயியாக உள்ள இவருக்கு சொந்தமான தோட்டம் பனிக்கர்குளத்தில் உள்ளது.  அந்த தோட்டத்தில் சற்குணம் நாயொன்று வளர்த்து வந்துள்ளார். அந்த நாயை பக்கத்து தோட்டக்காரரின்  நாய் கடித்ததாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . புகாரின்பேரில் காவல்துறையினர் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தோட்டக்காரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சற்குணம் நேற்று இரவில் 80 அடி உயரமுள்ள காற்றாலையின் மீது ஏறியுள்ளார்.

அப்போது பெய்த  கனமழையையும் பொருட்படுத்தாமல் காற்றாலையின் உச்சிக்கே சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார் . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சற்குணத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு காற்றாலையின் உச்சியில் இருந்த சற்குணம் கீழே இறங்கி வந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சற்குணத்தை  அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |