கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கைது நடவடிக்கை உடன் அபராத தொகையை 1,000, 2,000 ரூபாயாக அதிகரித்தால் என்ன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த திரு ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா தொற்று காரணமாக ஐந்து முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டும் கொரோனா பரவல் குறையவில்லை என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகைகளை அதிகரித்து ஆயிரம் மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்தால் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டால் என்ன என்று கேள்வி எழுப்பினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேறு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.