சீனாவின் தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள்…
சீனாவின் மத்திய நகரமான வூஹானில் டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த 5 மாத காலமாக ஏறத்தாழ 200 நாடுகளில் பரவிவிட்டது. 46 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வரும் 2 அம்சங்களில் முதல் அம்சம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். மற்றும் இரண்டாவது அம்சமாக தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது. இந்த நிலையில் சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் இனி வீட்டை விட்டு வெளியே பொது இடங்களுக்கு செல்வோர் முக கவசம் அணிவது அவசியமில்லை. இனி அவர்கள் சுதந்திர காற்றை சுகமாக சுவாசிக்கலாம் என்ற அறிவிப்பை பீஜிங் நகர நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாக வெளிட்டுள்ளது.
மேலும் அவர்கள், “இனி பொதுமக்கள் முக கவசம் அணிய தேவையில்லை. ஆனால் மற்றவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும். அதாவது தனிமனித இடைவெளியை தொடரவேண்டும்” என தெரிவித்துள்ளனர். இதனால் வானிலை மாற்றத்திற்கேற்ப பொதுமக்கள் வெளிப்புற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். மேலும் வாழ்க்கைத்தரத்தையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒத்திபோடப்பட்ட சீன நாடாளுமன்ற கூட்டம் 22 ம் தேதி திட்டமிட்டபடி தொடங்குகிறது. அதற்கான முன்ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த முக கவசம் அவசியமில்லை என்ற அறிவிப்பு வெளியாகி முக்கியத்துவம் பெறுகின்றது. அதற்கு முன்னதாக 21 ம் தேதி சீன மக்களின் அரசியல் ஆலோசனை மாநாடு பீஜிங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் 5 ஆயிரம் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் வரவு செலவு உள்ளிட்ட ஆண்டுக்கான செயல்திட்டங்கள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே சீனாவில் 17 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 12 பேருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று சீன தேசிய சுகாதார கமிஷன் கூறியுள்ளது. மேலும் இந்த வைரஸ் தோன்றினால் வூஹான் நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 82, 947 எனவும், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 78,227 எனவும், பலியானவர்களின் எண்ணிக்கை 4,634 ஆகவும் இருந்தது. சீனாவின் தலைநகர் பீஜிங்கில் 570-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர்.