பாகிஸ்தானை தோற்றுவித்தவரின் உருவச்சிலையானது அடையாளம் தெரியாத நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கடற்கரை ஒன்று உள்ளது. இந்த கடற்கரை ஓரத்தில் உள்ள குவாடர் என்ற பகுதியில் முகமது அலி ஜின்னா அவர்களின் உருவச்சிலை உள்ளது. இவர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில் இவரின் உருவச்சிலை அடையாளம் தெரியாத நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதில் உருவச்சிலை முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை முன்னணி என்ற அரசு தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து கடந்த வாரமும் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சோதனை மையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.