முகநூலில் மென் பொறியாளரின் கணக்கு போலவே போலி கணக்கு தொடங்கி மர்ம நபர் 15,000 ரூபாய் மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் புனேவில் உள்ள நிறுவனத்தில் மென் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் தனது பெயரில் முகநூல் கணக்கை தொடங்கி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இவரது முகநூல் கணக்கு போலவே போலியாக ஒரு கணக்கை உருவாக்கி சந்தோஷ் குமாரின் நண்பர்களிடம் பழகி அவர்களிடமிருந்து பணத்தை பறித்து வந்துள்ளார்.
இதுகுறித்து நண்பர்கள் சந்தோஷ்குமாருக்கு தகவலை தெரிவித்தனர். இதை அறிந்த சந்தோஷ் குமார் முகநூல் உதவியுடன் போலி கணக்கை முடக்கி உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் அந்த மர்ம நபர் தனது நண்பரிடம் 15,000 ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக தெரிவித்தார்.