திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் முக.ஸ்டாலின்முக்கிய முடிவு எடுக்கவுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவை விட திராவிட முன்னேற்றக் கழகம் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று திமுகவின் தலைமை செயற்குழு அவசரக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் , சென்னை கலைஞர் அரங்கில் திமுக தலைமை அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் , இதில் அனைத்து தலைமை செயற்குழு உறுப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் , கட்சி குறித்து ஆக்கப்பூர்வமான பணிகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.அதே போல திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இரு தலைவர்களும் சந்தித்து அறிக்கை வெளியிட்டு கூட்டணி விரிசல் பிரச்சனை நிறைவு பெற்றது குறித்தும் , காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும் திமுக தலைவர்கள் கருத்து கூறலாம்.
மேலும் இந்த கூட்டத்தில் மு.க ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்க இருப்பதாக தகவல் சொல்லப்படுகின்றது. இதில் தலைமை கழக பதவிகளில் சில மாற்றங்களை மு க ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.அதோடு இல்லாமல் சில மாவட்டச் செயலாளர்களையும் மாற்றி புதிய அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் அதற்காகத்தான் இந்த அவசர செயற்குழு கூட்டம் எனவும் திமுக தலைமை நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.