சென்னை விமான நிலையத்துக்குள் 5 திரைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் அமைக்க பி.வி.ஆர். நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
திரைப்பட கண்காட்சிகள், விநியோகம் மற்றும் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் பி.வி.ஆர் லிமிடெட் நிறுவனம், கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1,214 சதவிகிதம் லாபத்தை ஈட்டியுள்ளதுஇதுவரை 50 நகரங்களில் 584 திரைகளை வைத்திருக்கும் பி.வி.ஆர். நிறுவனம் நாடு முழுக்க இந்த ஆண்டுக்குள் 2000 திரைகளை அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
இந்நிலையில் பி.வி.ஆர். நிறுவனம் இப்போது சென்னை விமான நிலையத்துக்குள் மல்டிபிளக்ஸ் தியேட்டர் பல அடுக்கு கார் பார்க்கிங் வசதியுடன் சர்வதேச தரத்துடன் கூடிய 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சுமார் 15 கோடி ரூபாய் செலவில் இது அமைக்கப்பட உள்ளது. இந்த தியேட்டர் 1000-திற்கு மேல் இருக்கைகள் கொண்டதாக இருக்கும் எனவும், அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இது செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்போர்ட்டுக்கு வரும் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை பொழுதுபோக்காக கழிக்கும் வகையில் இது அமையும் . இங்கு 20% பயணிகளும், 80% வெளியிலிருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தியேட்டர்களில் உணவுப்பொருட்கள், குளிர்பான வகைகளும் கிடைக்கும்.