கடந்த 2019 ஆம் வருடம் சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று ஒன்றரை ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அடுத்த அவதாரம் எடுத்து வருகிறது. மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது .
இந்நிலையில் ஆஸ்திரியாவில் அமலில் இருந்த முழு ஊரடங்கு உத்தரவானது கடந்த 11-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆகவே முழு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டாலும் ஓட்டல்கள், விடுதிகளில் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு 3,600 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3 லட்சம் ரூபாய் ஆகும். இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களில் அனுமதிக்கலாம் என்றும் இவை இரவு 11 மணி வரை செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா பரவல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை உள்ளூர் நிர்வாகங்கள் விதித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.