ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 149 என்ற எளிய இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோஹித் – டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இந்த இணை தொடக்கம் முதலே அதிரடியாக ஆட, பவர் ப்ளே ஓவர்களில் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை எடுத்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த இணையை பிரிக்க முடியாமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் திணறினர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி மும்பை அணி 90 ரன்கள் எடுத்தது.
பின்னர் வீசப்பட்ட 11ஆவது ஓவரில் ரோஹித் ஷர்மா 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் வருண் சக்கரவர்த்தி பந்தில் போல்டாகினார். பின்னர் ஹர்திக் பாண்டியா – டி காக் இணை சேர்ந்தது. ஒருமுனையில் டி காக் அதிரடி காட்ட மும்பை அணி 30 பந்துகளில் 23 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. தொடர்ந்து வீசப்பட்ட 16ஆவது ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட்ட, 17ஆவது ஓவரில் 8 ரன்கள் சேர்த்து மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக டி காக் 44 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் மும்பை அணி மீண்டும் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.