நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் மும்பையில் கனமழை பெய்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்க கூடிய இந்த நிலையில் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையால் பெருத்த சேதத்தை மும்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தெற்கு மும்பையின் கோலபா பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில், 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று மழை பதிவானது. மழை மற்றும் பலத்த காற்று வீசியது. மணிக்கு 107 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அடுத்த சில நேரங்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மாநில முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கேட்வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கோலபா பகுதியில், ஒரேநாளில் 333.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது 1974 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் பெய்த மிக அதிக அளவு மழை ஆகும். மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையில் 64 சதவீதம் முதல் 5 நாட்களிலேயே பெய்துள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.