மும்பையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் டிஆர்பி ரேட்டிங் மோசடி நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மும்பை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஒரு தொலைக்காட்சி சேனலை தோராயமாக எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதை தனியார் நிறுவனம் ஒன்று இந்த வகையில் கணக்கிட்டு வாரந்தோறும் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே விளம்பரதாரர்கள் தொலைக்காட்சி சேனல்களுக்கு தங்களது விளம்பரங்களைக் கொடுத்து வருகிறார்கள். பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்ஸில் இந்தியா எனப்படும் பார் இந்தியா நிறுவனம் இந்தியா முழுவதும் இந்த பணியினை மேற்கொண்டு வருகிறது.
இந்தக் கணக்கீட்டு முறையில் தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முறைகேடுகள் நடைபெறுவதாக நெடுங்காலமாகவே புகார்கள் இருந்து வருகின்றன. அவ்வப்போது இந்த முறைகேடுகள் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடவடிக்கைகள் எடுக்க படுவதும் உண்டு. அந்த வகையில் தற்போது மும்பையிலும் இந்த முறைகேடு அரங்கேறி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த மோசடி தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் டிஆர்பி ரேட்டிங் மதிப்பிடுவதற்கான மீட்டர்களை நிறுவிய ஒரு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். மேலும் இந்த மோசடியில் பிரபல செய்தி சேனல்களான ரிபப்ளிக் டிவி, ஃபேக்ட் மராத்தி மற்றும் சினிமா உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு உள்ளதாக மும்பை காவல் ஆணையர் பரம்வீர்சிங் தெரிவித்துள்ளார்.
கல்வி அறிவு இல்லாத பகுதிகளில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் பார்க்க வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அங்கு குறிப்பிட்ட நேரத்தில் இந்த தொலைக்காட்சி சேனலை பார்க்க அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு 400 முதல் 700 ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மும்பை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த குற்றச்சாட்டை ரிபப்ளிக் டிவி நிறுவனத்தினர் மறுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் மும்பை காவல் ஆணையர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என அந்த சேனலின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.