முன்விரோதம் காரணமாக தொழிலாளியான வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லூரணி பகுதியில் வேலுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான கருப்புசாமி என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்புசாமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கருப்புசாமி வானரமுட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு சென்ற இசக்கிமுத்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதில் கருப்புசாமி பலத்த காயமடைந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து கருப்பசாமியின் தந்தையான வேலுசாமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற இசக்கிமுத்துவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.