முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்கொண்டார்குளம் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயியான தங்கராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் இளைஞரணி காங்கிரஸில் நிர்வாகியாக இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜூக்கும் அதே பகுதியில் வசிக்கும் பால் வியாபாரியான மருதையா என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கராஜ் தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்குசென்ற மருதையா மீண்டும் அவரிடம் தகராறு செய்துள்ளார்.
இந்த தகராறில் கோபமடைந்த மருதையா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தங்கராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த தங்கராஜ் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து தங்கராஜை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தங்கராஜை பார்த்தபோது அவர் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கராஜை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற மருதையாவை வலைவீசி தேடி வருகின்றனர்.