Categories
உலக செய்திகள்

மூன்று நாட்கள் எதற்கு?.. “ஒரே நிமிடத்தில் கண்டறிவேன்” – அசத்தும் மோப்ப நாய்கள்

மனித உடலில் ஏற்படும் வியர்வை வாசனை மூலமாக கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்கள் துபாய் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தன.ஆனால் சில நாட்களாக பல நாடுகளில் விமான சேவைகள் தொடங்கியுள்ளன. விமான பயணம் தொடங்குவதற்கு முன்னர் பயணிகளுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பரிசோதனையின்போது கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் மூன்று நாட்களுக்குப் பின்னர் வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிலையத்தில் மனிதர்களுக்கு கொரோனா உள்ளதா? என்பதை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள் முதன்முதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதே சமயத்தில் மோப்ப நாய்களால் வைரஸை கண்டறிய முடியுமா? முடியாதா? என்ற பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னரே புற்றுநோய், காசநோய், மலேரியா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்த்தொற்று உள்ளவர்களை மோப்ப நாய்கள் எளிதில் கண்டறிவதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் கொரோனாவை அவைகளால் கண்டறிய முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கே-9 மோப்ப நாய்கள் கொரோனாவை எளிதில் கண்டறிந்து விடுகின்றன. அது எவ்வாறு நடக்கிறது என்பதை காணலாம்.

  • விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் படை, கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்கு பாதுகாப்பான தனியறை ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளன.
  • அதன்பின்னர் விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகளின் அக்குள் பகுதியில் இருந்து வியர்வை மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
  • சோதனையை உறுதி செய்வதற்காக பயணிகளின் சளி மாதிரியும் குடுவையில் எடுத்து சேகரிக்கப்படுகிறது.
  • அறையில் இருக்கின்ற மோப்ப நாய்களின் எதிரில் இந்த மாதிரிகள் வைக்கப்படுகின்றன.
  • அந்த மாதிரிகளை மோப்பம் பிடிக்கின்றன நாய்கள், கொரோனா தொற்று இருப்பவர்களின் மாதிரிகளை காவல்துறையினருக்கு மிகவும் துல்லியமாக அடையாளம் காட்டுகிறது.
  • இதனை கண்டறிவதற்கு மோப்ப நாய்கள் ஒரு நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்கின்றன.
  • அதன் பிறகு தொற்று உறுதி செய்யப்பட்ட பயணிகள் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
  • கொரோனா நோயாளிகளை கண்டறிவதில் மோப்ப நாய்கள் 92% வெற்றி கண்டுள்ளன.

இதுபற்றி துபாய் காவல்துறையை சேர்ந்த மேஜர் சலா அல் மஸ்ரூப் கூறும்போது, “விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகளின் மாதிரிகளை சேகரிப்பதற்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் மிகவும் உதவி செய்கின்றனர். கொரோனா தொற்று இருப்பவர்களை மோப்ப நாய்கள் ஒரே நிமிடத்தில் கண்டறிவதால், விமான பயணத்தில் எந்தத் தாமதமும் ஏற்படுவது இல்லை” என்று கூறியுள்ளார்.

மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்தது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

  • கே-9 மோப்ப நாய்களுக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ள பொருள்களை மோப்பம் பிடிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • அதில் வெற்றி கண்டவுடன் வைரஸ் பாதித்த மனிதர்களை கண்டறியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • கொரோனா மருத்துவமனை மையங்களுக்கு மோப்ப நாய்கள் அழைத்துச் செல்லப்பட்டன.
  • அங்கு பரிசோதனைக்கு வந்தவர்களில் கொரோனா தொற்றுள்ளவர்களை மட்டும் கே-9 மோப்ப நாய்கள் சுற்றிவளைத்தன.
  • மோப்ப நாய்களுக்கு இந்த பயிற்சியை அளிப்பதற்காக கொரோனா பாதித்தவர்களின் சளி மற்றும் உடல் வியர்வை வாசனை போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு குற்றப்புலனாய்வு துறையில் கே-9 மோப்பநாய்கள்  பிரிவு முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தப் படைப் பிரிவில் ஜெர்மன் செப்பர்டு, மலினோய்ஸ் போன்ற நாய்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்த வகையான நாய்களுக்கு மோப்பம் பிடிப்பதற்கான 25 கோடி உணரும் செல்கள் மூக்கில் இருக்கின்றன.

Categories

Tech |