தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி 28 நாட்களுக்குப் பின்னர் போடப்படும் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 714 பேருக்கு நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி நேற்று பூண்டி பஜார், பட்டேல் நகர், ரங்கநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதற்கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு ஊழியர்கள் கலந்து கொண்டு பரிசோதனையும் செய்ததுடன் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி இரண்டாம் கட்ட தடுப்பூசி 28 நாட்களுக்கு பிறகு 714 பேருக்கும் இதே சுகாதார நிலையத்தில் போடப்படும் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.