நடிகர் எஸ்வி சேகர் தன் மீது போடப்பட்டுள்ள குற்றத்திற்காக முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூ-டியூப் சேனலில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு கூறியிருந்தார்.
அந்தமனுவானது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டனர். மேலும் அந்த மனுவில் தேசியகொடியை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்று கருதி முன்ஜாமீன் கேட்டு எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் ஆகஸ்ட் 24-ம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.