சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குனரும், இமாச்சல பிரதேசம் முன்னாள் டிஜிபியுமான அஸ்வாணி குமார் சிம்லாவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்வானி குமார் 2006 முதல் 2008 வரை அம்மாநிலத்தின் டிஜிபியாக செயல்பட்டுள்ளார். பின்னர் பதவி உயர்வு காரணமாக 2010 வரை சிபிஐ அமைப்பின் இயக்குநராக செயல்பட்டார். அறுபது ஒன்பது வயது நிரம்பிய இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அஸ்வானி குமார் தனது குடும்பத்துடன் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அஸ்வானி குமார் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அஸ்வானிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றில் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மன அழுத்தம் காரணமாகவே அஸ்வானி குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.