முன்விரோதத்தால் அதிமுக பேச்சாளரை தாக்கிய சகோதரர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் தெற்கு வீதியை சேர்ந்த மணவைமாறன் என்பவர் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளராக உள்ளார். இவருடைய சகோதரருக்கும், இவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று மணவைமாறன் வீட்டில் இருந்தபோது அவருடைய சகோதரர்களான சீதாராமன், சீனிவாசன் ஆகியோர் அவரது வீட்டிற்கு வந்து சத்தம் போட்டு திட்டி உள்ளனர். இந்த சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த அவரை சகோதரர்கள் 2 பேரும் கடுமையாகத் தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளன.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மணவைமாறன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சீதாராமன் , சீனிவாசன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் சீதாராமன் மணவைமாறன் தன்னை தாக்கியதாக மயிலாடுதுறை போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.