முன்விரோதம் காரணமாக போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலை நகர் பகுதியில் ஸ்ரீ சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மணிமுத்தாறில் உள்ள போலீஸ் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீ சரவணனும் அவரது நண்பரான விக்ரமனும் இணைந்து வீட்டிற்குச் சென்ற கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித்குமார் என்பவர் அங்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஸ்ரீ சரவணனை சரமாரியாக வெட்டியுள்ளார். அதனை அருகிலிருந்த விக்ரமன் தடுக்க முயற்சி செய்த போது அவரையும் ரஞ்சித்குமார் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் .
இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரீ சரவணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த விக்கிரமன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீ சரவணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் என்பவர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், சரவணன் ஆகியோரின் தலைமையில் 2 தனிப்படை காவல்துறையினரை அமைத்து தலைமறைவான ரஞ்சித்குமாரை தீவிரமாக தேட உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் ரஞ்சித் குமாரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஸ்ரீ சரவணனும் ரஞ்சித்குமார் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 8 மாதத்திற்கு முன்பு சரவணன் வீட்டின் அருகில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் ரஞ்சித்குமார் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டிருக்கும் போது ஸ்ரீ சரவணன் சென்று அவரை தட்டி கேட்டுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த ஸ்ரீ சரவணன், ரஞ்சித்குமாரை தாக்கி விட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீ சரவணனுக்கும், ரஞ்சித் குமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கோபமடைந்த ரஞ்சித்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்ரீ சரவணனின் கையை குத்தி விட்டார். இதில் காயமடைந்த ஸ்ரீ சரவணன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு தனது நண்பரான விக்ரமனுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த ரஞ்சித்குமார் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சரவணனை நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி தன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் ரஞ்சித் குமார் மீது அடிதடி வழக்குகள் உட்பட 12 வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளதால் இவரின் பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரஞ்சித் குமாரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.