வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் தம்மத்துகோணம் குருகுலம் சாலையில் பெபிலின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பை முடித்துவிட்டு தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் பெபிலின் இந்திரா தெரு பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த பெபிலின் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பெபிலினை அரிவாளால் வெட்டிய 2 பேர் தனிப்படை காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அனந்தன் பாலத்தை சேர்ந்த ஜோசப் வெலிங்டன், சூர்யா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேரும் பெபிலினுடன் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால் திடீரென இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் காரணமாக தாக்குதல் ஏற்பட்டதாக காவல்துறையினரின் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் ஜோசப் வெலிங்டன், சூர்யா ஆகிய 2 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.