ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி மறைவிற்கு இராணுவ அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவமானது அனைத்து தரப்பினரிடையே மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அவரின் மறைவிற்கு அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதில் “ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதியின் குடும்பத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் அமெரிக்க- இந்திய பாதுகாப்பு கூட்டணியில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்தவர்.
மேலும் இந்தியாவின் ஆயுதப்படைகளை ஒன்றாக இணைத்து ஓர் போர் அமைப்பாக மாற்றும் திறன் படைத்தவர். இந்த ஆண்டின் துவக்கத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலும் அவர் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நண்பராக திகழ்ந்தார். எங்களின் சிந்தனையும் பிரார்த்தனைகளும் அவரின் குடும்பத்தினர் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மீது தான் உள்ளது. இந்த இழப்பானது எங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.