Categories
உலக செய்திகள்

‘நல்ல ஹீரோவை நாடு இழந்துவிட்டது’…. இரங்கல் தெரிவித்துள்ள உலகத்தலைவர்கள்….!!

உலகத்தலைவர்கள் முப்படைகளின் தலைமை தளபதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில்  ஹெலிகாப்டர் ஓன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் என மொத்தம்  13 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் விமானி வருண்சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்தானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவரது மறைவிற்கு பல்வேறு உலக நாடுகள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அதில் நேபாள பிரதமரான ஷேர் பகதூர் தியூபா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதில் “ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி, அவரது மனைவி மற்றும் மற்ற பாதுகாப்பு அதிகாரிகளின் மறைவானது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

மேலும் அவரை இழந்து தவிக்கும் ஜெனரலின் குடும்பத்தினருக்கும்  ராணுவ வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பிரிட்டன் அரசு சார்பில் அந்நாட்டின் தூதரான அலெக்ஸ் எல்லீஸ் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள இரங்கல் செய்தியில் ” ஜெனரலின் மறைவை அறிந்து நாங்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளோனோம்.

வீரமிக்கவரான ஜெனரல் ராணுவ விவகாரங்களை கையாளுவதில் மிகுந்த சாமர்த்தியம் உடையவர்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் “ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜெனரல், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகளின் மறைவானது எங்களுக்கு பெரும் சோகத்தை தந்துள்ளது.

குறிப்பாக இந்தியா ஒரு சிறந்த தேசபக்தர் மற்றும் அர்ப்பணிப்பு குணமுள்ள ஹீரோவை இழந்துவிட்டது. ரஷ்யாவும் தனது நெருங்கிய நண்பரை இழந்து வாடுகிறது. அவர் நமது இரு நாடுகளின் மூலோபாயங்கள் கூட்டமைப்பில் பெரும் பங்களிப்பு அளித்தார். நாங்களும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறோம். குட்பை தோழரே! பிரியாவிடை தளபதி!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை பிரதமர் ராஜபக்சே, இஸ்ரேல் முன்னாள் பிரதமரான பெஞ்சமின் நேட்டன்யாகூ, ராணுவ அமைச்சரான  பென்னி காண்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரகம், பிரெஞ்சு தூதர், சிங்கப்பூர் தூதரகம், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சொலி,  தைவான் வெளியுறவு அமைச்சகம், பூடான் பிரதமர் என பல உலக நாடுகளின் தலைவர்கள் அவரின் மறைவிற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |