குழந்தைகள் கண் முன்பு மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் திருச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் தவசி-ராஜேஸ்வரி தம்பதியினர். புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தவசிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இதனால் ராஜேஸ்வரி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். ராஜேஸ்வரியின் நடத்தை மீது தவசி சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா அவர்களை அவ்வப்போது சமாதானப்படுத்தி வருவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் நேற்று இரவு தனது சொந்த ஊரான மன்னார்குடிக்கு செல்ல வேண்டும் என்று தவசி கூறியுள்ளார். இதற்கு ராஜேஸ்வரி சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டதால் சகுந்தலா வந்து சமாதானப்படுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார்.
தவசி ராஜேஸ்வரியின் மீது இருந்த ஆத்திரத்தில் அவரை கட்டையால் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததை குழந்தைகள் நேரில் கண்டுள்ளனர். மனைவியை கொன்று விட்டு வீட்டின் வெளியே தாழிட்டு தவசி தப்பிச் சென்றுள்ளார். வழக்கம்போல் சகுந்தலா காலையில் எழுந்து ராஜேஸ்வரியை காண வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறம் பூட்டப்பட்டிருப்பது கண்டார். ஆனால் உள்ளே குழந்தைகளின் அழுகுரல் கேட்டதால் அவர் சந்தேகம் அடைந்து கதவை திறந்து பார்த்துள்ளார். அங்கு ராஜேஸ்வரி ரத்த காயங்களுடன் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைப் பற்றி குழந்தைகளிடம் கேட்டபோது அவர்கள் நடந்ததை கூறியுள்ளனர். இச்சம்பவம் பற்றி அறிந்த தில்லைநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி சென்ற தவசியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.